×

குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு

புதுக்கோட்டை மாவட்டம் தங்கம்விடுதி கிராமத்தில் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து புதுக்கோட்டை துணை கண்காணிப்பாளரும், கந்தர்வகோட்டை காவல் ஆய்வாளரும் அந்த தொட்டியில் உள்ள நீரின் மாதிரிகளை எடுத்து ஆய்விற்கு அனுப்பினர்.

இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பகுடியை சேர்ந்த சண்முகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். அந்த வழக்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் வன்னியன் விடுதி, அரையாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் சில தேநீர் கடைகளில் இரட்டை குவளை முறை நடைமுறையில் உள்ளது. அதோடு சில திருமண மண்டபங்களை பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்த அனுமதிக்கப்படுவதில்லை.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே தங்கம் விடுதி கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கை வேறு விசாரணை அமர்வுக்கு மாற்றுவதோடு அந்த கிராமத்தை சேர்ந்த குடும்பங்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், தனபால் ஆகியோர் அமர்வில் விசாரனைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வழக்கறஞர் தங்கம் விடுதி கிராமத்தில் அனைத்து சமூதாய மக்களும் ஒற்றுமையுடனேயே வாழ்கின்றனர். சாணம் கலக்கப்பட்டதாக கூறப்படும் நீரின் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டத்தில் சாணம் எதுவும் கலக்கப்படவில்லை, அந்த நீரில் பாசியே காணப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு நீதிபதிகள், குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது. பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டிகள் இவ்வாறு தான் பராமரிக்கப்படுகின்றனவா என கேள்வியெழுப்பினார். இந்த வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை விசாரணையை மே 15-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

The post குடிநீர் தொட்டியில் பாசி எவ்வாறு வந்தது..? தமிழ்நாடு அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ICourt branch ,Tamilnadu government ,Thangamviduthi ,Pudukottai district ,Pudukottai ,Kandarvakotta Police ,Dinakaran ,
× RELATED மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்...